தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு தொழிலதிபராகவும் களம் இறங்கினார். ‘9Skin’ என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பையும் அறிமுகப்படுத்தினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடந்த ஃபெமினா விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, தனது வணிக நோக்கத்தைப் பற்றி பேசினார். “சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.
இது குறித்து மேலும் விவரித்த நயன்தாரா, “பெண்கள் நல்லா இருந்தா சமுதாயமும் நல்லா இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; ரொம்ப சாதித்த பெண்களுக்கும், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பா ஒரு ஆண் உள்ளனர்.
எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் இதுமட்டுமல்லாமல் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.
சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது. சானிட்டரி நேப்கின் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோரை சென்றடையவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும்” என்றார்.
நயன்தாராவின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு பரவவும், பெண்கள் நலன் காக்கப்படவும் நயன்தாராவின் வணிகம் ஒரு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
