பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் படம் கல்கி 2898 AD. படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் வரும் மே மாதம் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் பிரபாஸ் ஒரு விண்வெளி வீரராக நடிக்க, கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை சென்னை, மதுரை, ஐதராபாத், வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், “6000 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த ஒரு கதை, மீண்டும் மே 9ம் தேதி 2024ல் துவங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் அறிவிப்பை மேற்கொண்ட வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் அஸ்வினி தத், இந்தப் படம் தங்களுக்கு சிறப்பான தருணத்தை அளித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தங்களது நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்துடன் இந்தப் படம் இணைந்துள்ளதாகவும் தங்களது பயணத்தை இந்தப் படம் அர்த்தமுள்ளதாக ஆக்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
