தமிழ்நாட்டில் நேற்று வரை 91% பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிடவை வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் 3 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 2024-ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிட 31.12.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 91 சதவிகித ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகை : ரூ.1000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு மொபைல் எண்ணும் வழங்கப்படுகிறது.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, இன்றே வழங்கப்பட்டு உள்ளது. இன்று காலை வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.
இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக மஞ்சள் பையில் முதல்வர் ஸ்டாலின் படம் இடம்பெற்றுள்ளது. அவரின் உருவப்படம் உள்ள மஞ்சள் பையில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அரசு சேவைகள், திட்டங்கள் எதிலும் பெரும்பாலும் முதல்வர் படம் இல்லாத நிலையில் முதல்முறையாக அவரின் படம் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, காய்கறிகள், பழங்கள், சீயக்காய், சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால், இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்து சில பொருட்கள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்படுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
