தமிழ்நாடு பயணத்தின் இரண்டாம் நாளான ஜனவரி 20 அன்று, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் நடிகர் அர்ஜுன். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன், “என்னுடைய கோவிலுக்கு பிரதமர் மோடியை வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் வருவேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். சும்மா கேஷுவலாகத்தான் சந்தித்து பேசினேன்.
இப்போது தான் முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் மோடியை பிடிக்கும். ரொம்ப பிடித்தமானவர். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்திக்க வேண்டும் என்று அப்பாயிண்ட்மெண்ட் கேட்டோம். அவரும் உடனே கொடுத்துவிட்டார். இப்போது சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம்” என்றார்.
பா.ஜ.க-வில் இணைந்து விட்டதாக பரவிய செய்தி குறித்த கேள்விக்கு, “அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. அரசியல் என்பதே எனக்கு அவ்வளவாக தெரியாது” என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் மற்றும் மோடி ஆகியோரின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பா.ஜ.க-வில் அர்ஜுன் இணைய உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது. அர்ஜுனின் விளக்கம் இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
