நாளை மாசி மாத பெளர்ணமி தினம். இது மிகவும் மகத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படுகிறது.
மாசி மக நீராடல் எப்படி ஜகத்தை ஆளும் வல்லமையைத் தருகிறதோ, அதே போல மாசி பெளர்ணமி விரதம் அதிகாரங்களையும், பதவி உயர்வையும் தரும் என்பது ஐதீகம்.
சகல செல்வாக்கும், உயர் பதவிகளும், தொழிலில் மேன்மையும் அடைய இந்த விரதம் மிகுந்த பலன் தரும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த தினத்தில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்திட நினைத்த காரியம் நிறைவேறும்.
பல்வேறு மாத பௌர்ணமிகளில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்:
சித்திரை மாத பௌர்ணமி: சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து வழிபட முக்தி அடையலாம்.
வைகாசி மாத பௌர்ணமி: முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட இன்பமான வாழ்வு அமையும்.
ஆனி மாத பௌர்ணமி: காரைக்கால் அம்மையாருக்கு விரதம் இருந்து வழிபட இறை தரிசனம் கிட்டும்.
ஆடி மாத பௌர்ணமி: அம்பிகைக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட தீர்க்க சுமங்கலி வாழ்வு பெறலாம்.
ஆவணி மாத பௌர்ணமி: விரதம் இருந்து வழிபட சகோதர ஒற்றுமை மேலோங்கும்.
புரட்டாசி மாத பௌர்ணமி: முன்னோர்களை நினைத்து விரதம் இருந்தால் பித்ருக்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம்.
ஐப்பசி மாத பௌர்ணமி: சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்திட வறுமை, பசிப்பிணி நீங்கி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
கார்த்திகை மாத பௌர்ணமி: கார்த்திகை தீபத் திருநாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் சிறப்பான எதிர்காலம் அமையும்.
மார்கழி மாத பௌர்ணமி: விரதம் இருந்து நடராஜனின் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.
தை மாத பௌர்ணமி: தைப் பூச விழாவில் சிவனுக்கும், முருகனுக்கும் விரதம் இருந்து வழிபட்டால், வாழ்நாள் முழுவதுமே அவர்களின் அருள் கிடைக்கும்.
மாசி மாத பௌர்ணமி: விரதம் இருந்து வழிபட்டால், இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பும், ஆசீர்வாதமும் கிட்டும்.
பங்குனி மாத பௌர்ணமி: பங்குனி உத்திரப் பெருவிழாவில் வழிபாடு செய்தால் நல்ல வரன்கள் நம்ம வீட்டு வாசல் தேடி வரும்.
உங்கள் இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மறக்காமல் இந்த தினத்தன்று வழிபட்டு வாழ்வில் ஏற்றம் காணுங்கள்.
