நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவிற்குப் பிறகு, பலரும் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித் மட்டும் இன்னும் அஞ்சலி செலுத்தவில்லை.
இந்நிலையில், நடிகர் அஜித் ஏன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் செல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், பயில்வான் ரங்கநாதன் மெட்ராஸ் மூவிஸ் சேனலில் அண்மையில் பேசினார்.
அவர் பேசும் போது, “நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் விஜயகாந்த், மலேசியாவில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் அஜித் அந்த விழாவிற்கு வரவில்லை.
இதில் அஜித் மீது கடும் கோபத்தில் இருந்தார் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் நடிகர் அஜித்தை அவர் கிழி கிழி என கிழித்து தொங்க விட்டுவிட்டார்.
அஜித் இரண்டு மாதங்கள் கழித்து விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது நட்சத்திர கலைவிழாவிற்கு என்னால் வர முடியவில்லை; என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்றார். மேலும் வராத காரணத்திற்காக, ஒரு பெரிய தொகையை எடுத்து விஜயகாந்தின் கையில் கொடுத்திருக்கிறார்.
இதில் இன்னும் கோபமான விஜயகாந்த், இந்த பணத்திற்காக தான் நீ வராமல் இருந்தாயா?.. இல்லை எனக்கு இந்த பணம் தான் முக்கியமா?.. என்று அஜித்தை திட்டி தீர்த்து இருக்கிறார் கேப்டன்.
இந்த நிலையில் நடிகர் அஜித் திடீரென்று சட்டையை அவிழ்த்து இருக்கிறார். அப்போது அவரது முதுகில் ஆபரேஷன் செய்திருந்தது தெரியவந்தது.
அஜித் விஜயகாந்த்திடம், நட்சத்திர கலைவிழா நடக்கும் பொழுது எனக்கு முதுகு தண்டில் ஆபரேஷன் நடந்தது. அப்போது நான் மருத்துவமனையில் இருந்தேன்; அதனால்தான் என்னால் வரமுடியவில்லை. இந்த விஷயத்தை உங்களிடம் சரியான முறையில் என்னால் தெரிவிக்க முடியவில்லை என்று சொன்னதுமே, விஜயகாந்த் கண்ணீர் விட்டு விட்டார். தொடர்ந்து அஜித்திடம் மன்னிப்புக் கேட்டு அவர் கொடுத்த தொகையையும் வாங்கி இருக்கிறார்.” என்று பயில்வான் ரங்கநாதன் பேசினார்.
இந்த தகவல் உண்மையா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், நடிகர் அஜித்திற்கும் நடிகர் விஜயகாந்திற்கும் இடையே ஏற்பட்ட சண்டை மிகவும் வேதனைக்குரியது. நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு, அஜித் அவரது நினைவிடத்திற்குச் செல்லாமல் இருப்பது, அந்த சண்டையின் தாக்கத்தைக் காட்டுகிறது.
