தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அப்பா-மகன் கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. மகன் கதாபாத்திரத்திற்காக விஜய்க்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு, அவரை நவீன தொழில்நுட்பத்தில் இளமையாக காட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கவுள்ளனர்.
டைம் டிராவலை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே புத்தாண்டையொட்டி படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. GOAT எனும் தலைப்பு ஆங்கிலத்தில் “Greatest of all time” என்பதைக் குறிப்பதாக இருந்தாலும், தமிழில் “ஆடு” என்று பொருள்படுவதால் சிலர் இந்த தலைப்பை கிண்டலடித்து வருகின்றனர்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
